Home » » வல்வினை போக்கி வரமருளும் வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம்

வல்வினை போக்கி வரமருளும் வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம்

Written By www.kovilnet.com on Monday, 13 September 2010 | 23:49

தொன்மை சேர் கீர்த்தியோங்கும் துன்னையம் பதியின் கண்ணே மன்னிய கருணை கொண்டு வல்லிபுர ஆழ்வாராகிப் பொன்மகள் பூமாதேவி புடைசூழ வரங்கள் நல்குஞ் சென்னியில் துளவஞ் சேரும் திருமாலே சரணம் நீயே'

இலங்கை மாதாவின் சிரமெனத் திகழ்வது யாழ்ப்பாணம். அதன் இரு கண்கள் போல துலங்குவன துன்னாலை, பொன்னாலை என்னும் இடங்களில் உள்ள விஷ்ணு ஆலயங்கள் என தட்சண கைலாய மான்மியம் கூறுகின்றது.

அலைகடலின் தென்றல், அழகிய வெண்மணற்பரப்பு, அதைச் சுற்றி விரிந்த குடை போல் படர்ந்து நிழல் தரும் ஆல், அரசு கொன்றை, நாவல், இலுப்பை போன்ற பல்வேறு விருட்சங்கள், இவற்றின் மத்தியில் பார்ப்பவர் மனதில் பக்திப் பரவசம் தோன்றச் செய்யும் ஏழு தளமும் எழுபத்தியொரு அடி உயரமும் கொண்ட இராஜகோபுரத்தின் புதுப்பொலிவுடன் காட்சி தருவதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றதும் மிகவும் பழைமை வாய்ந்ததும் சிங்கை நகரில் அமைந்துள்ளதுமான ஆலயம்தான் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம்.

யாழ்ப்பாண இராச்சியத்தின் பழைய இராசதானி சிங்கைநகர் என்று சுவாமி ஞானப்பிரகாசர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை போன்ற அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவ்ஆலயம் தோன்றியதற்கும் விஷ்ணுவின் கரத்தில் உள்ள சக்கரம் கர்ப்பக்கிரகத்தில் வைத்து பூசிக்கப்படுவதற்கும் பல கர்ண பரம்பரைக் கதைகள் உண்டு.

இவ்ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 17 தினங்கள் உற்சவங்கள் நடைபெற்று எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவு பெறும்.

எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள முதல் ஆறு உற்சவங்களின் போதும் சக்கரத்தாழ்வார் உள்வீதி மட்டும் உலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார். எதிர்வரும் 14ஆம் திகதி வெளிவீதி உலா வருவார்.


முக்கிய உற்சவங்களான குருக்கட்டு விநாயகர் தரிசனம், வெண்ணெய் திருடுதல், துயில் திருவிழா, பாம்பு திருவிழா, கம்சன் போர், வேட்டைத்திருவிழா ஆகியன முறையே எதிர்வரும் 15ஆம், 16ஆம், 17ஆம், 18ஆம், 19ஆம், 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இந்நாட்களில் சுவாமி வடக்கு வீதியில் வரும்போது கற்கோவளம் அறநெறிப் பாடசாலை மாணவர்களால் அந்நாள் உற்சவத்தை சித்திரிக்கும் முறையில் அவை நாடகமாக நடித்துக் காண்பிக்கப்பட்டுவருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 7 மணிக்கு சப்பறத் திருவிழா நடைபெறும். எம்பெருமான் முத்துச் சப்பறத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலிப்பார். 22ஆம் திகதி தேர்த் திருவிழாவாகும். அன்று காலை 8 மணிக்கு நடைபெறும் வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு சக்கரத்தாழ்வார் தேரில் எழுந்தருளி வீதிவலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி ஆகும்.

தேர் வீதிவலம் வரும்போது ஆயிரக்கணக்கான ஆண்கள் அட்டாங்க பிரதட்சணம் செய்தும், பெண்கள் அடி விளக்கியும் தத்தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். ஏனையோர் 'கோபாலா', 'கோவிந்தா' எனக் கூறி தமது பக்திப் பரவசத்தை வெளிக்காட்டுவர்.

அத்துடன் அயற்கிராமங்களான வல்லிபுரம், துன்னாøல, புலோலி, கரவெட்டி, பருத்தித்துறை, கற்கோவளம் பகுதிகளில் இருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் பலர் தூக்குக் காவடி, பறவைக் காவடி எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவுசெய்வர். இவர்கள் கைகள், கால்கள், முதுகு ஆகியவற்றில் முள்ளால் குத்தி வருவதை பார்க்கும் போது மயிர்க்கூச்செறியும். தேரின் பின்னால் பக்தர்கள் பண்ணிசை பாடிவருவதும் குறிப்பிடத்தக்கது.


எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் சமுத்திரத் தீர்த்தம் இடம்பெறும். ஆரம்பத்தில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள வங்கக்கடலில் கற்கோவளம் பகுதியில் இத் தீர்த்தோற்சவம் இடம்பெறும். அன்று நண்பகல் முதல் பக்தர்கள் வங்கக்கடலை நோக்கி சாரை சாரையாகச் செல்வர்.

இவற்றை பார்க்கும் போது கடல் அலையோ, மக்கள் தலையோ என எண்ணுமளவுக்கு பல ஆயிரக்கணக்கானோர் செல்வர். அன்று மாலை 4 மணியளவில் விநாயகர், சக்கரத்தாழ்வார், மகாலக்ஷ்மி ஆகியோர் தீர்த்தமாடும் வங்கக் கடலுக்கு தூக்கிச் செல்லப்பட்டு அன்று மாலை 6 மணியளவில் ஆஞ்சநேயருக்கு தீர்த்தமாடுதல் இடம்பெறும்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டின் நிலைமை காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் அதுவும் இராணுவத்தில் பதிவுசெய்யப்பட்டவர்கள் மட்டும் கடலுக்குச் சென்று கடல் நீரை குடத்தில் எடுத்துவந்து ஆலய ஈசான மூலையில் எழுந்தருளி இருக்கும் சம்சுரத்தாழ்வாருக்கு தீர்த்தமாடுதல் கிரியைகள் நடைபெறும்.

கடந்த ஆண்டு ஆலய அறங்காவலர் சபையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளையடுத்து சகலரும் வங்கக்கடலுக்கு என்று தீர்த்தமாடி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

24ஆம் திகதி காலை 10 மணிக்கு கேணித் தீர்த்தம் நடைபெறும். அயலில் உள்ள திருக்கேணியில் இத்தீர்த்தம் இடம்பெறும். இக்கேணியில் இருந்துதான் 'நாமம்' என்ற திருப்பொட்டுக்கான களிமண் எடுக்கப்பட்டு வந்தது.

ஏனைய ஆலயங்களில் சந்தனம், குங்குமம் பொட்டாக நெற்றியில் போடப்படுவது போல இவ்ஆலயத்தில் திருநாமம் பொட்டாக போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அன்று பிற்பகல் 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறும். எதிர்வரும் 25ஆம்திகதி ஆஞ்சநேயர் மடை நடைபெறும்.

சமயக்கோட்பாடுகளுக்கும் கலாசாரத்திற்கும் அமைவாக சகலரும் உடைகள் அணிந்து பெறுமதிமிக்க தங்கத்தினாலான ஆபரணங்கள் அணிவதைத் தவிர்த்து உற்சவங்களில் கலந்து வல்லிபுர மாயவனின் அருளைப் பெற்றுச்செல்லுமாறு அறங்காவலர் சபைத் தலைவர் இளையதம்பி அன்னலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலய உற்சவக் கிரியைகள் பிரம்மஸ்ரீ ச.க. சுதர்சன சர்மா குருக்கள், பிரம்ம ஸ்ரீ ச.க. புருஷோத்தம குருக்கள் ஆகியோர் தலைமையில் பல சிவாச்சாரியார்களால் நடத்தப்படும்.

உற்சவ நாட்களில் அன்னதானம் இடம்பெறும். அன்னதானம் செய்ய விரும்புவோர் களஞ்சியசாலையுடன் தொடர்பு கொள்ளுமாறு அறங்காவலர் சபையினர் கேட்டுள்ளனர்.

உற்சவ காலங்களில் விசேட பஸ் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஆலய அறங்காவல் சபையினரால் சமயப் பணிகள் பல செய்யப்படுவதோடு சமூகப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

'அரி ஓம் நமோ நாராயணாய நமக'

அகல்யா அற்புதானந்தன் 
Share this article :

Post a Comment